கட்சி கூட்டங்களுக்கான வழிமுறை சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி உத்தரவு
மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருக்குமரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குறுகிய தெருக்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், நீர்நிலைகள் மற்றும் விமான நிலைய பகுதிகள் தவிர்த்து ஊருக்கு வெளியே கட்சி பொது அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி காந்திமதிநாதன் ஆகியோர், ‘‘வருங்காலங்களில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்களை கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து 5 கிமீ தொலைவில் நடத்துவதற்கு தேவையான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட வேன்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா ஆகியோரது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ அகியவற்றிற்கு அனுமதி வழங்கும் முன் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிய மனுக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்த மனுக்களை விசாரிப்பதற்காக இரு நீதிபதிகள் அமர்வு விரைவில் அமைக்கப்படும், அதன்பிறகு அனைத்து மனுக்களும் அங்கு விசாரிக்கப்படும்’’ என்றனர்.