கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக காங்கிரஸ் மாநில செயலாளர் சஸ்பெண்ட்
சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக காங்கிரஸ் மாநில செயலாளர் அயன்புரம் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம்மோகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அயன்புரம் கே.சரவணன் காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் வகையிலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் சமூக ஊடகங்களில் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து பொது வெளியில் வெளியிட்ட செயல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சட்ட விதியின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.
எனவே, அயன்புரம் கே.சரவணன் காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி ஒழுங்கு மீறிய நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் தமிழ்நாடு காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியினர் இனிவரும் நாட்களில் ஒழுங்கு மீறும் வகையில் இதுபோன்ற தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தலைவர்கள், நிர்வாகிகளின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தரம் தாழ்ந்து சமூக ஊடகங்களிலோ அல்லது பொது வெளியிலோ பேசினாலோ அல்லது பதிவுகள் செய்தாலோ அவர்கள் மீது காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.