மனிதநேய ஜனநாயக கட்சி விவகாரம் தமிமுன் அன்சாரிக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
சென்னை: மனிதநேய ஜனநாயகக் கட்சி கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது. கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த இந்த கட்சி, இரட்டை இலை சின்னத்தில் நாகப்பட்டினம், வேலூரில் போட்டியிட்டது. நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும், வேலூரில் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீதும் போட்டியிட்டனர். இதில், தமிமுன் அன்சாரி வெற்றி பெற்று எம்எல்ஏவானார். ஹாரூண் ரசீது தோல்வியடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 டிசம்பர் 10ல் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக டி.கே.பஷீர்அகமது, பொதுச்செயலாளராக ஹாரூண் ரசீது, துணைத் தலைவராக செய்யது மகபு சுபஹனி, பொருளாளராக என்.ஏ.தைமியா மற்றும் 6 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டதாக ஹாரூண் ரசீது தரப்பு கடந்த 2023 பிப்ரவரி 22ல் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
கட்சியின் செயற்குழுக்கூட்டம் 2022 அக்டோபர் 8ம் தேதி இளையான்குடியிலும், பொதுக்குழுக்கூட்டம் 2022 டிசம்பர் 24ல் எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடந்ததாகவும், அதில் தனது தலைமையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் தமிமுன் அன்சாரி தரப்பும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டங்களும் நிர்வாகிகள் தேர்வு செல்லாது என்றும், கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கக்கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி மற்றும் உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர அனுமதி கோரி ஹாரூண் ரசீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாரூண் ரசீது தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஸ்ரீனிவாஸ், வழக்கறிஞர் குணசேகரன் ஆகியோரும், தமிமுன் அன்சாரி தரப்பில் வழக்கறிஞர் என்.எஸ்.அமோக் சிம்ஹாவும் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருதரப்பும் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவதால், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் எழுப்பும் ஆட்சேபனைகள் குறித்தும் பிரதான வழக்கின் விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும். எனவே, மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சார்பில் தமிமுன் அன்சாரியை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
