ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தல் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: கடும் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது
இதைத் தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி என்பதால் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக தொடர்ச்சியாக அவர் கூறுவது குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். பஹல்காம் விவகாரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார். ஆனாலும், எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு அவை கூடியபோதும், விவாதம் நடத்த அரசு தரப்பு தயாராக இல்லாததால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதன் காரணமாக 3 முறை அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மாநிலங்களவை காலையில் கூடியதும், அவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 3 நியமன எம்பிக்கள் உட்பட புதிய 5 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவையிலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தக் கோரி பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் சார்பில் விதி 267ன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்ததால் கடும் அமளி ஏற்பட்டது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி என்பதால் இவ்விவகாரத்தில் முழு அளவிலான விவாதம் நடத்துவது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் போரை நிறுத்தியதாக 24 முறை கூறி வருவது குறித்தும் அரசு பதிலளிக்க வேண்டுமெனவும், போர் நிறுத்ததால் இந்தியாவிற்கு அவமானம்
ஏற்பட்டுள்ளது குறித்தும் அரசு விளக்கம் தர வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டனர். இந்த அமளியால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து அரசு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவைத் தலைவர் தன்கர் குறிப்பிட்டார். இதே போல, இந்த விவகாரத்தில் முழுமையான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக அவையின் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பணிந்த ஒன்றிய அரசு ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரங்கள் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டது. அவை அலுவல் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதால், அடுத்த வாரம் இது குறித்து விவாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதத்தில் பிரதமர் மோடி கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.