நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டேன் திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக உள்ளது: வைகோ பேட்டி
கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வாய்ப்பே இல்லை. திமுக தனியாக அரசு அமைக்கும். நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டு வந்துவிட்டேன். நாடாளுமன்றத்தில் எனது கடமையை செய்து உள்ளேன். அங்குள்ள அனைத்து கட்சியினரும், என்னை நேசிக்க கூடியவர்கள். என்னுடைய உரைக்கு பின்பு, ஒவ்வொருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
மீண்டும் இந்த அவைக்கு வர வேண்டும் என்று தலைவர்கள் பேசினார்கள். யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. முக்கியமான பிரச்னைகளில், தமிழ்நாட்டை பாதுகாத்தோம். உரிமைகளை பாதுகாத்தோம். எப்படி விரட்டி அடித்தோம். இப்போது மீண்டும் திறக்க வேண்டும் என்று, சிலரை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கிறது, நாசக்கார ஸ்டெர்லைட் நிறுவனம். ஸ்டெர்லைட் என்ற பெயரில், தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்.
முல்லை-பெரியாறுக்காக கம்பத்தில் ஒரு கூட்டம். இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க திருப்பூரில் கூட்டம், காவிரி குறித்து குடந்தை, திண்டுக்கலில் கூட்டம். சென்னையில் 2 இடங்கள் என முடிவு செய்து உள்ளோம். 7 நாளில் 7 பிரமாண்டமான கூட்டங்களில் நான் கலந்துகொள்ள உள்ளேன். தேர்தலில் தனி சின்னம் குறித்து, தேர்தல் வரும்போது பேச வேண்டிய கருத்து. இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது.
எடப்பாடி பழனிசாமியை விட பெரிய கூட்டம் முதல்வர் ஸ்டாலின் செல்கிற எல்லா இடங்களில் வருகிறார்கள். திராவிடத்தை தமிழக மக்கள் ஆதரிக்கிறார்கள் எனபதற்கு அதுவே சாட்சி. மக்கள் நலக்கூட்டணி போல், தற்போது கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக, கம்பீரமாக இருக்கிறது. இந்த கூட்டணியில் சலனத்திற்கும் சஞ்சலத்திற்கும், கூட்டணி தலைவர்கள் மத்தியில் துளியளவு எண்ணம் கூட கிடையாது. இவ்வாறு வைகோ கூறினார்.