நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை
டெல்லி : நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு மாத காலத்தில் 21 அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதல், பீகார் விவகாரம் குறித்து விவாதிக்க ஏதுவாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டது, அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளதால், அவை குறித்து முழுமையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புவதாக கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால் நாட்டின் நலன் கருதி மசோதாக்களை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்த அவர், தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவை குறித்து 2 நாட்கள் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன என்று கூறினார். ஆனால் அமளி காரணமாக மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் இன்று முதல் மசோதாக்களை நிறைவேற்றுவதில், அரசு கவனம் செலுத்தும் என கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.