நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஒன்றிய அரசு அடிபணிகிறதா..? காங்கிரஸ் மூத்த தலைவர் சரமாரி கேள்வி
புதுடெல்லி: அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷ்யாவிடமிருந்து ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து வருவதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வர்த்தக ஒப்பந்தம் 90% முடிந்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினாலும், இதுவரை தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை. இந்த தாமதத்தால் அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி குறைந்து, இந்தியாவில் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்கப்போவதாக பிரதமர் மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை நினைவு கூர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ஒன்றிய அரசு இதனை மறுத்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து வருவதே உண்மை என்றார்.
இதுதொடர்பாக, ‘மோடி மறைப்பதை, டிரம்ப் வெளிப்படுத்துகிறார்’ என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபரின் அறிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சீனா தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க நிச்சயம் கோரிக்கை வைப்போம். ஆனால், வெறும் 15 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் சம்பிரதாயமான கூட்டத் தொடர் தான். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு, ஒன்றிய அரசு வேறொன்றைச் செய்வதால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை சுமூகமாக செயல்பட அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் இந்தக் கூட்டம் வழக்கமாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.