தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம்:‘இந்தியா’ கூட்டணி அதிரடி திட்டம்: வாக்கு திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது

 

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி உள்ளன. இதனால் வாக்கு திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு காரணங்களுக்காக 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. நாடாளுமன்றத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தால் கடும் அமளி நடக்கிறது. இதற்கிடையே, பாஜவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடகா மக்களவை தேர்தலின் போது பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையும் மேற்கொண்டுள்ளார். இதனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார்.

அதில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய அவர் ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் பேசுவதால் அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆதாரம் இருந்தால் அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் மட்டும் தேர்தல் ஆணையம் ஏன் பிரமாண பத்திரம் கேட்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாகி உள்ள நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, ராகுல் காந்தியின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் செயல்பாட்டில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்பதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சில எம்பிக்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டுமென பெரும்பாலான எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை விவாத கட்டத்தில் இருந்தாலும், மீண்டும் கூடி முடிவெடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி நசீர் உசேன், ‘‘மக்கள் எழுப்பும் அனைத்து கவலைகள் மற்றும் கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் பதிலளித்து தீர்வு காணும் என்றும், மக்களால் சுட்டிக்காட்டப்படும் சந்தேகங்கள் மற்றும் முரண்பாடுகளை நீக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், வாக்காளர் பட்டியலில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் குறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூறவில்லை. நாட்டில் முற்றிலும் பாரபட்சமற்ற தலைமைத் தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆணையமும்தான் நமக்குத் தேவை.

எனவே, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எந்தவொரு செயல்முறையையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிப்போம்’’ என்றார். இதனால் வாக்கு திருட்டு விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

* பிரமாணபத்திரம் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

சமாஜ்வாடி கட்சியின் எம்பி ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘‘வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களுடன் ராகுல் காந்தி பிரமாணபத்திரம் தர வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2022 உபி சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்கள் 18,000 பேர் நீக்கப்பட்டதாக நாங்கள் புகார் அளித்தோம். அது தொடர்பாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார். எனவே, பிரச்னையை திசை திருப்பத்தான் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியிடம் பிரமாண பத்திரம் கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

* பாஜ செய்தி தொடர்பாளராக மாறிய தேர்தல் ஆணையர்

இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி உள்ளிட்ட 8 முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக தலைமை தேர்தல் ஆணையர் பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளர் போல நடந்து கொண்டார்’’ என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.

காங்கிரஸ் எம்பி சவுரவ் கோகாய் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பிலிருந்து தப்பி ஓடுகிறது. நியாயமாக தலைமை தேர்தல் ஆணையர், எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் எதிர்க்கட்சிகளை தாக்கி பேசுகிறார். பீகாரில் தேர்தல் நெருங்கும் நிலையில் தீவிர திருத்தத்தை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. இதன் மூலம் சில பக்கச்சார்பான அதிகாரிகளின் கைகளில் தேர்தல் ஆணையம் உள்ளது என்பது தெளிவாகிறது. அத்தகைய அதிகாரிகள் எந்த விசாரணைக்கும் எதிரானவர்கள்’’ என்றார்.

* எதிர்க்கட்சிகளுக்கு பாஜ சவால்

பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி வாக்கு திருட்டு என கூச்சலிடுவது அவரது பழக்கமாகி விட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போல இந்தியாவிலும் குழப்பமான சூழ்நிலை உருவாகி அரசியல் ரீதியாக பயனடைய விரும்புகிறார்கள். இது அவர்களின் முயற்சி. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவர்கள் எதிர்ப்பதன் ஒரே நோக்கம், சட்டவிரோத ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதாகும். உண்மையிலேயே அவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தேகிப்பதாக இருந்தால், முதலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவையை கலைத்துவிடுங்கள்’’ என்றார்.