மறுபடியும் வெளுக்கட்டும்
இந்நிலையில் இன்று பரபரப்பான சூழலில் இவ்வாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்குகிறது. இதையொட்டி சம்பிரதாய அடிப்படையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டமும் நடந்தேறி விட்டது. அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இன்று தொடங்கும் கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகள் நிச்சயம் கேள்விக்கணைகளை ஏவிவிடும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து வெளிப்படையான தகவல்கள் இல்லை.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை ஒன்றிய அரசு இன்னமும் கைது செய்யவில்லை. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி இன்று வரை வாய் திறக்கவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டாலும், அமெரிக்காவின் பொம்மலாட்டம் போல் இப்போர் இருந்ததாக டிரம்ப் அடிக்கடி பகீர் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு ஒன்றிய அரசு சார்பில் மறுப்புகள் ஏதும் தெரிவிக்கப்படுவதில்லை.
ஒன்றிய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் மோதி அவற்றை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் மென்பொருளை கொண்டு, தீவிரவாதிகளை கட்டுப்படுத்தாமல், எதிர்கட்சிகளுக்கு எதிராக அதை பயன்படுத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என தெரியும் நிலையில், அந்த உளவுத்துறை தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பாஜ புண்ணியம் தேடி கொண்டது. இன்று தொடங்கும் மழைக்கால நாடாளுமன்ற கூட்ட தொடரில் ஒன்றிய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக பல கேள்விகள் தொடுக்கப்படும்.
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, காசா விவகாரத்தில் இந்தியாவின் குழப்ப நிலைப்பாடுகள், பீகார் பேரவை தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நாடாளுமன்ற கூட்ட தொடரில் அனலை கிளப்பும். குஜராத் மாடல் என காலம் ஓட்டிக் கொண்டிருந்த பாஜ அரசு, இப்போது தங்கள் கோட்டையிலே தலைகுனிந்து நிற்கின்றனர். அங்கு பாலங்கள் இடிந்து விழும் சம்பவம், 241 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்து ஆகியவையும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேரலைகளை எழுப்பக்கூடும். அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மர்மங்களை ஒன்றிய அரசு இன்னமும் அறுதியிட்டு விளக்க முடியவில்லை.
இவை ஒருபுறமிருக்க, எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவை ஒத்திவைப்பு நாடகத்தை அரங்கேற்றி விட்டு, பாஜவினர் தாங்கள் கொண்டு வரும் மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்றி விடுவதிலே குறியாக இருப்பர். இந்தியா கூட்டணி கட்சிகளின் இடி முழக்கத்தில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜவின் பாசிச முகம் மறுபடியும் ஒருமுறை வெளுக்கட்டும்.