நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளது. இது துரதிஷ்டவசமானதாகும். மேலும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இருப்பினும் இன்னும் அதற்கான தரவுகள் தொகுதி வரையறைகள் செய்யப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘இடஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்துவது ஒன்றிய அரசின் பொறுப்பு ஆகும். குறிப்பாக இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். இருப்பினும் அரசியலமைப்பு சட்ட விதிகள் என்பது சமூக சமத்துவத்தை குறிப்பிடுகிறது. சுமார் 48 சதவீத பெண்கள் நாட்டில் உள்ளனர். இந்த வழக்கு பெண்களின் அரசியல் சமத்துவம் குறித்தானது ஆகும். எனவே அரசியலமைப்பு சட்டம் 15ன் பிரிவு 3ல் உள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தொகுதி வரையறை எப்போது செய்யப்பட உள்ளது என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.