நாடாளுமன்ற துளிகள்
மாநிலங்களவையில் பேசிய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘‘ 18 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் முதல் முறையாக பிஎஸ்என்எல் ரூ.262கோடி நிகர லாபத்தை அடைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த லாபம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2023-2024ம் இதே காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.1262கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதே காலாண்டில் லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது” என்றார் .
கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா நிறைவேற்றம்
மக்களவையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியபோது,‘‘நாட்டில் கடலோர கப்பல் போக்குவரத்தில் மகத்தான திறனை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு மிகவும் பிரத்யேக மற்றும் எதிர்கால சட்டத்தை வழங்குவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்” என்றார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியபோது,‘‘நாட்டில் கடலோர கப்பல் போக்குவரத்தில் மகத்தான திறனை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு மிகவும் பிரத்யேக மற்றும் எதிர்கால சட்டத்தை வழங்குவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்” என்றார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
விமான நிறுவனங்களுக்கு
24 வெடிகுண்டு மிரட்டல்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், ‘‘கடந்த 2022ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை விமான நிறுவனங்களுக்கு மொத்தம் 836 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. 2022ம் ஆண்டில் அழைப்புகளின் எண்ணிக்கை 13ஆக இருந்தது. 2023ம் ஆண்டு இது 71ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு இது 728ஆக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி வரை மொத்தம் 24வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. 2024ம் ஆண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
வங்கி கட்டணங்களை மாற்றுங்கள்
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்,‘‘ஏடிஎம்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் காசோலை புத்தகத்தை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும், மிகவும் கொடூரமான விஷயம் என்னவென்றால் உங்கள் வைப்புத்தொகை குறைந்தபட்ச இருப்புக்கு கீழே குறைந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. வங்கி கிளைக்களுக்கு சென்று அதிகாரிகளுடன் பேசுவதற்கு கூட கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மாற்ற வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மக்களவை நேற்று கூடியவுடன் ஜபல்பூரில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவையில் முழக்கங்களை ஏற்படுத்திய அவர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.