பார்க்கிங்கை விட்டு கார் வெளியில் செல்லவில்லை அஜித்குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்தாரா? முரண்பாடான பதில்களால் சிபிஐ சந்தேகம்
மதுரை: மடப்புரம் கோயில் பார்க்கிங்கை விட்டு நிகிதாவின் கார் வெளியில் செல்லவில்லை என்றும், அஜித்குமார் மீது நகை காணவில்லை என அவர் அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என்றும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
அஜித்குமாரின் நண்பரான பிரவீன்குமார், தம்பி நவீன்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 முறைக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர். இது தவிர அரசு மருத்துவர், கோயில் ஊழியர் ஆகியோரிடமும் விசாரித்துள்ளனர். நகை காணாமல் போனதாக திருப்புவனம் போலீசில் புகார் கூறிய பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் 2 முறை விசாரணை நடத்தி கிடுக்கிப்பிடியான கோள்விகளை கேட்டிருந்தனர். நிகிதாவிடம் இரண்டாம் முறை நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, நிகிதா கார் சாவியை சில நிமிடங்களிலேயே அஜித்குமார் கொடுத்துவிட்டதாகவும், கோயில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என்றும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அஜித்குமார் மரண வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.