பாரீஸ் ஒலிம்பிக்கோடு எனது பயணம் முடியவில்லை : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பதிவு
மும்பை : பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்மல்யுத்தத்தில் 50 கி.பிரிவில் 100 கிராம் எடை கூடியதால், இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பதக்கமின்றி நாடு திரும்பினார். தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு, மல்யுத்த போட்டிகளில் அவர் பங்கேற்காத நிலையில், தற்போது லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆவலாக உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பாரீஸுடன் தனது பயணம் முடிந்துவிட்டதாக பலர் கருதினார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை நிரூபிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. தற்போது தான் அதற்கான நேரம் அமைந்துள்ளது.நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும் என் மனதில் விளையாட்டுத் தீ அணையவில்லை. அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன்,"என தெரிவித்துள்ளார். மல்யுத்தம் விளையாட பிடித்திருக்கிறது, அதில் சாதிக்க ஊக்கம் இன்னும் தனக்குள் உள்ளது என்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான பயணத்தை தனது மகனின் ஊக்கத்துடன் தொடங்குகிறேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.