ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழத் துடிக்கின்ற ஒட்டுண்ணி கரூர் சம்பவத்தை வைத்து யாரையாவது மிரட்டலாமா என பார்க்கிறது பாஜ: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ராமநாதபுரம்: கரூர் சம்பவத்தை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணியான பாஜ பார்க்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 51 ஆயிரம் பேருக்கு ரூ.426.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து ரூ.176.59 கோடி மதிப்பிலான 109 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார், ரூ.134.45 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த பிறகு மீனவர்கள் பற்றி பேசாமல் இருக்க முடியாது. கடலோர மாநிலமான தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்தாலும் அதில் 25 சதவீதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடக்கிறது 2023, ஆகஸ்ட் மாதம் வந்தபோது ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாட்டில் மீனவர்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 10 அறிவிப்புகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. மானிய டீசல் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டா, தூண்டில் வளைவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி கூட்டுறவு கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 81,588 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும்போது, நாம் கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். கச்சத்தீவினை மீட்க சட்டபேரவையில் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறோம். ஆனால் ஏதும் செய்யாமல் ஒதுக்குகிறது ஒன்றிய அரசு. இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
இலங்கை சென்ற பிரதமர் மோடியும் பேச மறுக்கிறார். கச்சத்தீவினை விட்டுக்கொடுக்க முடியாது. தரமாட்டோம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறும்போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் ஏதும் கூறாமல் மவுனம் காக்கிறார். ஜிஎஸ்டியால் நிதி உரிமை போச்சு, நிதி பகிர்வில் ஓரவஞ்சனை, பிரதமர் பெயரில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் நாம் தான் படி அளக்க வேண்டி உள்ளது. ஒன்றிய அரசை நாம் வாழ வைத்து கொண்டிருக்கிறோம், ஆனால், அவர்கள் ஜிஎஸ்டி, நீட், தேசிய கல்வி கொள்கை என்று கல்விக்கு தடை, தொகுதி மறு சீரமைப்பு, மொழி திணிப்பு, கீழடி அறிக்கைக்கு தடை, பள்ளி கல்விக்கான நிதி தர மாட்டார்கள். பேரிடர் நிதி தராதது என தமிழகத்தை வஞ்சிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. தமிழர்கள் என்றாலே பாஜ ஒன்றிய அரசுக்கு கசக்கிறது.
மாநிலங்களே இருக்க கூடாது என பாஜ நினைக்கிறது. தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது. இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டும் - அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது! “இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா? உருட்டலாமா?” என்று பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர்வாழத் துடிக்கின்ற ஒட்டுண்ணியாக தான் பா.ஜ. இருக்கிறது.
மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜவுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பாஜவை அதிமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதாவது இருக்கிறதா? எந்த கோரிகையாவது முன் வைத்து கூட்டணி சேர்ந்திருக்கிறார்களா? எதுவும் கிடையாது.
தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தங்களுடைய தவறுகளிலிருந்து தப்பிப்பதற்கான வாஷிங் மிஷின் தான் பாஜ. அந்த வாஷிங் மிஷினில் உத்தமராகிவிடலாம் என்று குதித்திருக்கக்கூடிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், கூட்டத்திற்கு கூட்டம் - மேடைக்கு மேடை - தெருவுக்கு தெரு சென்று நம்முடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை வழங்கி இருக்கிறார்கள்.
அவரோ, மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழ்நாட்டு மக்களின் மேலேயும் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பாஜவுடன் கூட்டணிக்கு போகமாட்டார்கள். ஏனென்றால், நாட்டு மக்களை துண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தக்கக்கூடிய அரசியல் முகம், அதிகார பலம் தான் பாஜ. அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பாஜ.
பாஜ. வரலாறு முழுவதும் இவர்களுடைய கொள்கை சதி திட்டங்களுக்கு எதிராக நின்று, தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்கின்ற நம் பணி அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் ஆட்சி 2.0விலும் தொடரும். தமிழ்நாட்டின் வளர்ச்சி, உரிமை, மக்கள் தேவைகளை உணர்ந்து உங்களுடன் ஸ்டாலின், நலம்காக்கும் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், தாயுமானவர், அன்புக்கரங்கள் என பல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றி வருகிறோம். திட்டங்கள் தொடரும். 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது. இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டும் - அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது.
* கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, நேற்று பகல் 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவ மாணவியரிடம், கை குலுக்கி மகிழ்ச்சியுடன் அவர்களிடம் உரையாடினார். அதனைத் தொடர்ந்து ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், கேஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தமிழரசி ரவிக்குமார், கலெக்டர் பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.