அதிமுக ஆட்சியில் 110 விதியோடு நின்று போன பரப்பலாறு அணை தூர்வாரும் பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
* அமைச்சரின் தீவிர முயற்சியால் கிடைத்தது
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குச் சொந்தமான வடகாடு மலைப் பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளவு 197.95 மில்லியன் கன அடியாகும். பரப்பலாறு அணையின் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.
கடந்த 2014-2015 அதிமுக ஆட்சியில் பரப்பலாறு அணை ரூ.19.50 கோடி செலவில் தூர்வாரப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கடந்த ஆட்சியாளர்கள் இந்த அணையை தூர்வாராமல் கிடப்பில் போட்டிருந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தனது தேர்தல் அறிக்கையில் பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு தீவிர முயற்சி எடுத்ததன் பேரில், ஒன்றிய அரசு அதிகாரிகள் அணை பகுதியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து தற்பொழுது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பரப்பலாறு அணையை தூர்வார அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பரப்பலாறு அணையின் நீர் பிடிப்பு பரப்பு நிலை மாறாமல் அதன் உயரமான 90 அடியை மீட்டெடுக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணி 2028 டிச. 31க்குள் முடிக்க வேண்டும் எனவும், தூர்வாரும்பொழுது அகற்றப்படும் மண்ணை வனப்பகுதிக்குள் கொட்டக் கூடாது, அதனை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அல்லது பொது இடத்தில் கொட்ட வேண்டும். பணிகள் குறித்து வருடாந்திர அறிக்கை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், தூர்வாரும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வனப்பகுதியில் முகாமிட கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தற்போது ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சிவக்குமார் கூறியதாவது, ‘‘ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை கட்டப்பட்டதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல், அணையில் வண்டல்மண் அதிகளவில் சேர்ந்து அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் இருந்து வந்தது.
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டும், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமலும் விவசாயிகள் பெரும் சிரமத்தில் இருந்து வந்தனர். பின்னர் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து அப்போது எம்எல்ஏவாக இருந்த அர.சக்கரபாணி தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வலியுறுத்தி வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனுக்குடன் துரித நடவடிக்கை ஒன்றிய அரசின் அனுமதி பெற்றுத் தந்துள்ளார் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். முதல்வருக்கும், அமைச்சர் அர.சக்கரபாணிக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி,’’ என்றார்.