பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான்: காஞ்சியில் சீமான் பேட்டி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியது: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கிருந்து பறப்பதற்குபோதுமான வானூர்தி இல்லாதபோது மேலும் ஒரு விமானநிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது தேவையற்றது.
ஏர்பூட்டி உழுதால்தான் யாரும் சாப்பிட முடியும். ஏர்ப்போட் வந்தால் யாரும் சாப்பிட முடியாது. இயற்கை விளைநிலங்கள் அனைத்தும் அழிந்துபோகும். வெளிநாடுகளில் 680 ஏக்கர், 861 ஏக்கர் பரப்பளவில்தான் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பறப்பதற்கு ஏராளமான வானூர்திகள் இருக்கின்றன. இச்சூழ்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் தேவையற்றது.
விளை நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க விடவேமாட்டோம். பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சி யாகத்தான் இது இருக்குமே தவிர ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி என்று சொல்ல முடியாது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். இவ்வாறு கூறியுள்ளார். பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.மனோஜ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காமாட்சி, ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.