பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக, பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது. அதிலும் கடந்த சில வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக பெய்த மழையால் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது.
மேலும் சோலையார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால் கடந்த சில வாரமாக அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1500 முதல் 1800 கன அடி வரை இருந்துள்ளது.இதனால், அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைவாக இருந்தாலும், பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1800 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து தொடர்ந்துள்ளது.
இதில், நேற்று மதியம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70 அடியை தொட்டது.இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு அடியையும் எட்டிவிடும் என்பதால் மெயின் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார்,ஆழியார் அணைகளின் நீர்மட்டம் முழு அடியை எட்டிய நிலையில்,அடுத்ததாக விரைவில் பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு அடியை எட்ட உள்ளதால் பிஏபி பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.