பரமத்திவேலூரில் தாழ்ப்பாள் போட்டதால் அங்கன்வாடி மையத்தில் சிக்கி தவித்த குழந்தை
*தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்
பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் அருகே, அங்கன்வாடி மையத்தின் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த குழந்தையை, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார்-நந்தினி தம்பதியின் 3 வயது மகன் ரித்விக், அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கன்வாடியில் இருந்த அனைத்து குழந்தைகளும், மையத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கன்வாடி மையத்திற்குள் சென்று தனியாக விளையாடிய ரித்விக், எதிர்பாராத விதமாக மையத்தின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டான். ஆனால், தாழ்ப்பாளை மீண்டும் திறக்கத் தெரியாததால், பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான்.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அங்கன்வாடி மைய காப்பாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தும், அவர்களால் முடியவில்லை. இது குறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெல்டிங் மிஷின் மூலம் அங்கன்வாடி மையத்தின் கதவின் ஓரத்தில் வெட்டி, நீளமான கம்பியை கொண்டு தாழ்ப்பாளை திறந்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.