பரமக்குடி அருகே பயங்கர விபத்து; கார் - லாரி மோதி தம்பதி, மகள் உட்பட 4 பேர் பலி: குற்றாலம் சென்றபோது கோரம்
பரமக்குடி: பரமக்குடி அருகே காரும், லாரியும் மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் பலியாகினர். காயம் அடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம், செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (63). இவர் மனைவி யமுனா (55), மகள் ரூபினி (30), மகன் சரண்ராஜ் (30) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வாடகை காரில் குற்றாலத்திற்கு புறப்பட்டார். காரை ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியை சேர்ந்த டிரைவர் காளீஸ்வரன் (29) ஓட்டிச் சென்றார். ராமநாதபுரம் - மதுரை நான்குவழிச் சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் நேற்று அதிகாலை காரும், எதிரே மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற சரக்கு வாகனமும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த யமுனா, ரூபினி, டிரைவர் காளீஸ்வரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். கோவிந்தராஜன், சரண்ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். சரக்கு வாகனத்தில் மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள், மதுரையில் இருந்து வீடு காலி செய்து விட்டு பொருட்களை ஏற்றிச்சென்றபோது இந்த விபத்து நடந்தது. அந்த வாகனத்தில் இருந்தவர்களில் டிரைவர் முத்துராஜா (23), நாகநாதன் (47), ஜெயமாலா (44) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். மற்ற இருவரும் காயமின்றி தப்பினர்.
பரமக்குடி தாலுகா போலீசார் வந்து காயமடைந்த 5 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு 5 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துவிட்டார். மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.