பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்
நெல்லை : நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தினமும் நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி மூலம் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வருவது தெரிய வந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகிறது.
ஆனால் அதையும் மீறி சிலர் மறைத்து வைத்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், மதுபாட்டில்களை கொண்டு செல்கின்றனர். அவர்கள் அருவி பகுதியில் பயன்படுத்தி விட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்.இதனால் வனப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நெல்லை கள இயக்குநர் மண்டல வனப்பாதுகாவலர் ஆனந்த் உத்தரவின் பேரில், புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு வழிக்கட்டுதலின் படி பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் மற்றும் பாபநாசம் சூழல் சரக வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள பாலீத்தின் பைகளை அப்புறப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில், அகஸ்தியர் அருவி பகுதியில் பாலீத்தின் பைகள், பாட்டில்களை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் மன்னார்கோவில் அரசு பள்ளி மாணவர்கள், அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முகாமில் திருவள்ளுவர் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ரேவதி, வனவர்கள் செல்வசிவா, மோகன், வனக்காப்பாளர் அஜித், வனக்காவலர் பாசில் அமல், சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி சூழல் தன்னார்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.