பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நிர்வாக துறை இயக்குநர் ஆய்வு
பண்ருட்டி : நகராட்சி நிர்வாகதுறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நகராட்சி நிரவாகதுறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி தெரிவிக்கையில், பண்ருட்டி நகராட்சி பகுதியில் ரூ.219 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும், குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளாக லட்சுமிபதி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், பண்ருட்டி பேருந்து நிலையம் ரூ.470 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கடைகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவதையும், ரூ.582 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி தினசரி சந்தை கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், ரூ.500 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மழைக்காலம் என்பதால் சாலைப் பணிகள், வடிகால் பணிகள் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக முடிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், இணை இயக்குநர் லட்சுமி, ஆணையர் காஞ்சனா, நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.