பந்தலூர் அருகே இன்று காலை தேயிலை தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை
பந்தலூர்: பந்தலூர் அருகே இன்று காலை தேயிலை தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோசர்வ் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாட பணிக்காக வெளியே வந்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உள்ள கம்பி வேலியில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தை சிக்கி அதிலிருந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியதை கண்டனர்.
இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேவாலா ரேஞ்சர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர், தேவாலா போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுத்தை அருகே செல்ல முடியாததால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகே சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை என வனத்துறையினர் மேற்கொண்டர்.
இதனை அடுத்து 4 மணி நேரத்திற்கு பின் சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சிறுத்தை சிகிச்சைக்கு பின் காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.