பந்தலூர் புஞ்சக்கொல்லி பகுதியில் வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியல்
பந்தலூர் : பந்தலூர் அருகே புஞ்சக்கொல்லி பகுதியில் வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி புஞ்சக்கொல்லி காவயல் சாலைப்பகுதியில் பள்ளத்தாக்கான பகுதியில் 9 ஆதிவாசி குடியிருப்புகள் இருந்து வந்தது.
இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதால், வனவிலங்குகளால் ஆதிவாசி மக்கள் குடியிருக்க முடியாமலும் விவசாயம் செய்யமுடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
கோரிக்கையை ஏற்று வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டு புஞ்சக்கொல்லி சாலையோரப்பகுதியில் 7 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அந்த இடங்களில் தற்போது அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் ஆதிவாசி மக்கள் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டால் வனத்துறை அதற்கு தடை செய்வதாகவும் தங்களை மிரட்டி அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று ஏழு குடும்பங்களை சேர்ந்த மக்கள் நேற்று புஞ்சக்கொல்லி சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதிவாசி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் போராட்டத்தில் கலந்து கொண்டார். சம்பவ இடத்திற்குசேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் போலீசார் வந்து ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன்பின் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.