ஊராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களின் வாடகை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு: சொந்த வருவாயை உயர்த்த ஆலோசனை, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அரசு குழு அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணை: கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சியின் கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்கவும், சொந்த வருவாயை உயர்த்தவும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட கலெக்டர் தலைவராகவும், கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், வணிகர் சங்க பிரதிநிதிகள் (இருவர்) உறுப்பினர்களாகவும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைப்பாளராகவும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் இந்த வழிக்காட்டுதல் குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி விவாதித்து கிராம ஊராட்சிகளின் காலி நிலங்கள், கட்டிடங்கள், கடைகளுக்கான வாடகை, குத்தகை நிர்ணயம் செய்ய வேண்டும். சட்ட ரீதியான வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அதேபோல் சென்னை மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளில் இருக்கின்ற கடைகள், வணிக வளாகங்களின் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டு குழுக்கள் 2024ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதுபோல, சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமைக்கப்படும்.
இந்த குழு கிராம உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் சொத்துவரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றறும் அனைத்து வருவாய் ஈட்டக்கூடிய வரியில்லா இனங்கள் குறித்து விவாதித்து தேவைக்கு ஏற்ப வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து கிராம உள்ளாட்சிகளில் ஏற்றத்தாழ்வற்ற நியாயமான வருவாய் ஈட்டுவதற்கு வழிவகை செய்தல், கிராம உள்ளாட்சிகளில் வருவாய் குறித்து ஏற்படும் முக்கியமான மற்றும் உள்ளூர் மட்டத்தில் தீர்க்க இயலாத பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.