பம்பையில் நாளை சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு: 3,500 பேர் பங்கேற்பு
திருவனந்தபுரம்: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் நாளை நடைபெறுகிறது. இதில் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றும், சபரிமலையில் ரூ. 1000 கோடிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு பம்பையில் நாளை (20ம் தேதி) சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நேற்று பம்பையில் நிருபர்களிடம் கூறியது: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு 20ம் தேதி (நாளை) பம்பையில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாஸ்டர் பிளான் உள்பட சபரிமலை வளர்ச்சிப் பணிகள் குறித்து 3 அமர்வுகளில் விவாதம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.