பாம்பன் பாலத்தில் 50 கிமீ வேகத்தில் மட்டுமே ரயில் இயக்க அறிவுறுத்தல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - ராமநாதபுரம் இடையேயான வழித்தடம் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு கடந்த செப். 19ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் தூக்குப்பாலத்தில் ஏற்கனவே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ரயில்வே பாதுகாப்பு மற்றும் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் புதிய தூக்குப்பாலம் முழுமையாக அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ளதால், மென்பொருள் ஒருசேர இயங்குவதற்கு சில மேம்படுத்துதல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுவரை தூக்குப்பாலத்தில் மட்டும் அனைத்து ரயில்களையும் மிதமான வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ரயில்களும் வரையறுக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது மின்சார ரயில் சேவைக்கு மாற்றப்பட்டு அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜின் மூலம் இயங்கி வருகின்றன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 90 முதல் 110 கி.மீ வேகம் வரை செல்கிறது. பாம்பன் ரயில் பாலத்தில் 75 கிமீ வேகம் வரை ரயிலை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (சிஆர்எஸ்) அனுமதி அளித்திருந்த நிலையில், தொழில்நுட்ப மேம்படுத்துதல் பணிகள் முடியும் வரை வரையறுக்கப்பட்ட 50 கி.மீ. வேகத்தில் தான் ரயிலை இயக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.