பள்ளிபாளையத்தில் பிடிஓவை கடத்திய பஞ்.,செயலர் உள்பட இருவர் அதிரடி கைது
* கார் பறிமுதல்; கூலிப்படைக்கு வலை
* ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் பிடிஓ கடத்தல் விவகாரத்தில், ஊராட்சி செயலர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படை வைத்து கடத்திச்சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாக பணிபுரிபவர் பிரபாகர்(54). இவர் நாமக்கல் ஜெட்டித்தெருவில் மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி இரவு, அலுவலக பணிகளை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். இரவு 9.45 மணிக்கு அவரது மனைவி யசோதா, அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சில மணி நேரத்தில், யசோதாவை வேறு ஒரு செல்போனில் இருந்து பிரபாகர் தொடர்பு கொண்டார். அப்போது, தன்னை சிலர் காரில் கடத்திச்செல்வதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யசோதா உடனடியாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் துரிதமாக செயல்பட்டனர். அனைத்து சோதனைச்சாவடிகள், டோல்கேட்டுகள் உஷார்படுத்தப்பட்டன. பிடிஓ கார் சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. தகவலறிந்து நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா பள்ளிபாளையம் விரைந்தார். மேலும், மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
டிஎஸ்பிகள் நாமக்கல் தன்ராஜ், திருச்செங்கோடு கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார், கடந்த 5ம் தேதி வேலகவுண்டம்பட்டியில் சலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிரபாகரின் காரை கண்டறிந்து மீட்டனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், பிடிஓவை கடத்திச் சென்ற காரின் பதிவெண்ணை வைத்து, அதன் உரிமையாளரை ஈரோட்டில் பிடித்து விசாரித்தனர்.
பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளர் நந்தகுமார் என்பவர், செல்போனில் தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இன்னோவா காரை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தார். இதன்பேரில், அடுத்த சில நிமிடங்களில், ஊராட்சி செயலர் நந்தகுமாரை போலீசார் கொத்தாக தூக்கினர்.
விசாரணையில் நந்தகுமார், கூலிப்படை அமைத்து பிடிஓவை கடத்தி வைத்துள்ளது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், கடத்தல் காரை போலீசார் பின்தொடர்ந்தனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல், பிடிஓவுடன் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு காரில் பறந்தனர். பின்னர், புதுக்கோட்டை நல்லூர் டோல்கேட்டில், பிரபாகரை இறக்கி விட்டு, அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர்.
இதையடுத்து, மறுநாள்(சனிக்கிழமை) காலை நல்லூர் டோல்கேட்டிலிருந்து இரவல் போனில், மனைவியிடம் பேசிய பிடிஓ பிரபாகர், பஸ் பிடித்து நாமக்கல் வருவதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில், திருச்சி விரைந்த போலீசார், பிரபாகரை மீட்டு நாமக்கல் அழைத்து வந்தனர். இதற்கிடையே ஊராட்சி செயலர் நந்தகுமாரிடம் தனிப்படை போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். இதில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தான், பள்ளிபாளையம் பிடிஓவாக பிரபாகர் பொறுப்பேற்றது தெரிய வந்தது.
அவர் பொறுப்பேற்றதும், காடச்சநல்லூர் ஊராட்சி செயலரான நந்தகுமார், பணியில் அலட்சியமாக இருந்து வந்ததையும், ஊராட்சி பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் போடாமல், தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாலும், பிடிஓ கண்டித்துள்ளார். இதனால், அவர் மீது நந்தகுமார் கடும் வெறுப்பில் இருந்துள்ளார்.
மேலும், பிடிஓவிடம் அதிக பணப்புழக்கம் இருப்பது குறித்து, தனது நண்பரான கீழ் காலனியில் பழைய இரும்பு கடை வைத்துள்ள தாடி ஈஸ்வரன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் கூலிப்படை அமைத்து, பிடிஓவை கடத்திச்சென்று பணம் பறிக்க திட்டம் தீட்டினர். ஈரோட்டில் வாடகை கார் உரிமையாளரை தொடர்பு கொண்ட இருவரும், அழைப்பிதழ் கொடுக்க கார் வேண்டுமென கூறியுள்ளனர்.
இதற்காக 2500 ரூபாயை நந்தகுமார் முன்பணமாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஈரோடு வைராபாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவா(29), காரை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். காரில் பள்ளிபாளையத்தில் கூலிப்படை கும்பல் காத்திருந்தது. பிடிஓவின் நடவடிக்கையை கண்காணித்து வந்த ஊராட்சி செயலர் நந்தகுமார், உடனுக்குடன் கூலிப்படைக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார். இரவு 9.15 மணிக்கு பிரபாகர் தனது காரில் நாமக்கல் புறப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பிரபாகரின் காரை துரத்தியபடி வந்த கார், வேலகவுண்டம்பட்டியில் சுற்றிவளைத்து கடத்திச் சென்றது தெரிவந்தது. இதையடுத்து, நாமக்கல் வந்த காரை, அய்யம்பாளையம் பிரிவு ரோடு அருகே போலீசார் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இரவு மடக்கினர். பின்னர், டிரைவர் சிவாவை கைது செய்தனர். மேலும், ஊராட்சி செயலர் நந்தகுமாரும் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடமிருந்து கார் கைப்பற்றப்பட்டது. நந்தகுமாரின் கூட்டாளியான ஈஸ்வரன் தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.