பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைப்பு..!!
சென்னை: பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த 37 வயது பெண் விசைத்தறி வேலை செய்து வருகிறார். அவர் வாங்கிய கடனை கட்டமுடியாத காரணமாக கல்லீரலை சென்னையில் விற்பனை செய்வதற்கான முயற்சியில் இடைத்தரகர் மூலமாக ஈடுபட்டுள்ளார்.
இடைத்தரகர்கள் மூலமாக கல்லீரல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ செலவிற்கான கட்டணத்தை வழங்க வேண்டும் என இடைத்தரகரும், அந்த மருத்துவமனை தரப்பிலிருந்தும் மிரட்டியதாக பெண் புகார் அளித்துள்ளார். புகாரினை ஏற்ற சுகாதாரத்துறை கல்லீரல் தொடர்பான இடைத்தரகர் மற்றும் எந்த மருத்துவமனை என்பது குறித்தான விசாரணை மேற்கொள்வதற்கு குழுவை நியமித்துள்ளனர்.
கல்லீரல் கொடுத்தால் ரூ.8 லட்சம் பணம் கிடைக்கும் என தெரிவித்த புரோக்கர்கள் மூலமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கல்லீரலை விற்பனை செய்ய முற்பட்டதாகவும் பெண் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விசாரணை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழுவினை மீண்டும் கல்லீரல் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.