பல்லாவரம் சாலையில் 4 அடி ஆழ திடீர் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பல்லாவரம்: பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழ பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென நேற்று பள்ளம் ஏற்பட்டது. 4 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தால், அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எந்த நேரத்திலும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடைந்தது. அதன்பிறகு அந்த இடத்தை முறையாக மண் போட்டுமூடாமல், ஏதோ கடமைக்காக மூடி சென்றதன் விளைவாக பள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமின்றி உயிர் காக்கும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற வாகனங்கள்கூட இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையுள்ளது. இதை கருத்தில் கொண்டு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சரிசெய்து மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.