பெருங்கற்காலத்தில் மக்கள் வசித்ததை உறுதி செய்யும் பள்ளபாளைய கற்திட்டை
உடுமலை : உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் உடுமலையை சுற்றியுள்ள தொல்லியல் சின்னங்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் பள்ளபாளையம் செட்டிகுளம் பகுதியில் 3000 ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட கற்திட்டையை ஆவணப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோது இது மூடுகல் என்றும், சுமைதாங்கி கல் என்றும், பகவான் கோயில் என்றும் பலவாறாக தமது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த கற்திட்டைக்கு அருகில் ஒரு பழங்கால சிவன்கோயிலும் வழிபாட்டில் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டு உள்ளது.
இந்த கற்திட்டை குறித்து தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: வரலாற்று காலத்திற்கு முன்பு குமணன் ஆட்சி செய்த பகுதியாக கூறப்படும் நமது பகுதியில் பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக கற்திட்டைகள் இருப்பதையும், இது மடத்தூர், நீலம்பூர், கொழுமம் ரெட்டையம்பாடி, பெரியபாப்பனூத்து பகுதிகளில் இது போன்று சீராக இல்லாத, ஒழுங்கமைக்கப்படாத பெரும் கற்பாறைகளால் ஒரு அறை போன்று உருவாக்கப்பட்டு அதில் அக்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை பெரும் தாழிகளில் வைத்து புதைத்து அதனை வழிபட்டு வருவது வழக்கம்.
இது போன்ற கல்திட்டைகள் பெரும்பாலும் மிகப் பெரிய நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். ஆனால், பொதுமக்கள் அறியாமையினாலும் புதையல் வேட்டைகளாலும் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டு, அழிந்து போய்விடுகின்றன. இத்தகு தொல்லியல் சின்னங்கள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
பெரியபாப்பனூத்து, நீலம்பூர் பகுதியில் அப்பம்மா கோயில் எனவும், அவ்வாதாத்தா கோயில் எனவும் வழிபட்டு வருகின்றனர். ஆனால் இங்கு பள்ளபாளையத்தில் பகவான் கோயில் என்றும், சுமைதாங்கிக் கோயில் எனவும் மக்கள் வழிபட்டு வருவது பெருங்கற்காலத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.