தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல்

தென்காசி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- ”எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையும் - உச்சந்தலையைப் போல உள்ளத்தையும் இதமாக்கும் குற்றாலமும் – இப்படி தூறலும் சாரலும் கொண்டு மக்கள் மனங்களை குளிர்விக்கும் மண் இந்த தென்காசி மண்.

வடக்கே ஒரு காசி என்றால், தெற்கே ஒரு தென்காசி என்று சொல்லத்தக்க வகையில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கோவில் குடமுழுக்கை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்திய மகத்தான அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு. அதிலும், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, ஆலங்குளத்தில் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் கடந்த மாதம் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் பேசிய அன்பு மகள் பிரேமா அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வீடு வழங்கக்கூடிய ஆணையை நாங்கள் வழங்கினோம். இப்போது விரைந்து அங்கு வீடு கட்டக்கூடிய பணி வேகம், வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல, இப்போது மேடையில், 1 இலட்சமாவது பயனாளியான இலத்தூர் கிராமத்தைச் சார்ந்த திருமதி சுமதி முத்துக்குமார் என்பவரின் கனவு இல்லத்திற்கான சாவியை உங்கள் முன்னால் நான் வழங்கியிருக்கிறேன்.

காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும் - தலைக்கு மேல் ஒரு கூரையும் வேண்டும் என்பது, ஒவ்வொரு மனிதனின் கனவு! வீடு என்பது ஒவ்வொருடைய குடும்பத்தின் கனவு!

குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகளை கட்டித் தரவேண்டும் என்று குடிசையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தான் தலைவர் கலைஞர் அவர்களின் கனவையும் - ஏராளமான குடும்பங்களின் கனவுகளையும், ஒருசேர நிறைவேற்றுகின்ற மகிழ்ச்சியோடு உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுத்தி வரக்கூடிய ஊரக உள்ளாட்சித் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரன் பூலித்தேவன் - தளபதி ஒண்டிவீரன் - தேவநேயப் பாவாணர் போன்ற பெருமக்களைத் தந்து பெருமைகளை கொண்ட இந்த தென்காசி மாவட்டத்தில் மகத்தான அரசு விழாவை - மாபெரும் மக்கள் திருவிழாவாக - மாநாட்டைப் போல ஏற்பாடு செய்திருக்கிறார் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்

திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய அரசியல் பொதுவாழ்க்கையில் இதைப் போல, எத்தனையோ பிரமாண்டமான மாநாடுகளை, நிகழ்ச்சிகளை அவர் நடத்தி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பதைப் போல அமைந்திருக்கிறது.

வருவாய்த் துறை அமைச்சராக அவரின் மகத்தான சாதனை என்ன தெரியுமா? இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இவருடைய Period-ல்தான் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 743 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி இருக்கிறோம்!

அதேபோல, 9 இலட்சம் முதியோருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது. வருவாய்த் துறை சார்பில், 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் விண்ணப்பித்த நான்கரை இலட்சம் பேருக்கு சான்றிதழைத் தராமல் வைத்திருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் சான்றிதழை வழங்குவதுதான் இந்த சாத்தூராரின் சாதனை!

இப்படி தன்னுடைய அனுபவத்தாலும், அமைதியான செயல்களாலும் அரசுக்கு நற்சான்றிதழை பெற்றுத் தந்திருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

அதேபோல, அவருக்குத் துணை நின்று பணியாற்றியிருக்கக்கூடிய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்களுக்கும், தென்காசி மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம்.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதை நோக்கமாக கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். நீங்கள் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்… தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்… தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இதுபோன்ற அரசு விழாக்களில் நான் பங்கேற்று, அந்தந்த மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்!

அந்த வகையில், இன்றைக்கு இந்த தென்காசி மாவட்டத்தில், 141 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 117 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 291 கோடி ரூபாய் மதிப்பிலான 83 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 இலட்சத்து 44 ஆயிரத்து 469 பேருக்கு 587 கோடி ரூபாய்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் என்று ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கி இருக்கிறேன்.

இந்த நான்கரை ஆண்டு காலத்தில், அனைத்து அரசுத் துறைகளின் மூலமாக தென்காசியில் நடைபெற்ற பணிகள் குறித்த ஒரு ஆய்வறிக்கையை தயாரிக்கச் சொல்லியிருந்தேன். அதை நான் வாங்கிப் பார்த்தபோது, எனக்கே மலைப்பாக இருந்தது! பெரும்பாலும், இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களும், கிராமங்களும் ஏதாவது ஒருவகையில் பயனடைந்திருக்கிறது என்று சொல்லத்தக்க வகையில் அந்த அறிக்கை இருந்தது.

அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த பணிகளில் சிலவற்றை மட்டும் ஹைலைட்டாக, தலைப்புச் செய்தியாக நான் சொல்லவேண்டும் என்றால்,

15 ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள்

16 தூர் வாரும் பணிகள்

குத்தம்பாஞ்சான், மகேந்திரவாடி, கழுநீர்குளம், கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சமுதாயக் கிணறுகள்

சொக்கம்பட்டி, பெரும்புத்தூர், கூடலூர், பருவக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உணவு தானியக் கிடங்குகள்

ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

ராவுத்தபேரியில் எலுமிச்சை சிறப்பு மையம்

நடுவக்குறிச்சியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை

வினைதீர்த்த நாடார்பட்டி பள்ளியில் வகுப்பறைகள்

தென்காசி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு

மேலக்கரை நல்லூரில் சுகாதார நிலையம்

ஆழ்வார்குறிச்சி, குற்றாலம், திருவேங்கடம், பண்பொழி உள்ளிட்ட 12 ஊர்களில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்

இலஞ்சியில் புதிய சமுதாய நலக் கூடம் -

கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, கடையத்தை உள்ளடக்கிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் என்று ஏராளமான பணிகளை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள்!

உங்கள் அனைத்து ஊர் பெயர்களும் அரசின் அறிக்கையில் இருக்கிறது. அந்தளவுக்கு தென்காசி மாவட்டத்தில் திட்டப்பணிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. அதற்கென்று இவ்வளவு தூரம் நான் வந்து, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா? போனால், நீங்கள் விட்டுவிடுவீர்களா! அதற்கும் நான் அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

தென்காசி மாவட்டத்துக்கு இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தின் விளைவாக, பத்து புதிய அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு –

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தென்காசி மாவட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில், 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு –

சங்கரன்கோயில், மேல-நீலித-நல்லூர் பகுதிகளில் இருக்கின்ற பெண்களுக்கு - அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீர்த் தேவைகளை நிறைவு செய்ய, 52 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு –

தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு –

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, 6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு –

சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் இருக்கின்ற விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்த பகுதிகளில் இருக்கின்ற பல்வேறு முக்கிய கண்மாய்கள் 12 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு –

தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் இருக்கின்ற கடனா அணை 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு –

கடையநல்லூர் வட்டத்தில் இருக்கின்ற வரட்டாறு பாசன அமைப்பின் கீழுள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

எட்டாவது அறிவிப்பு –

செங்கோட்டை வட்டத்தில், அடவி நயினார்கோயில் அணைத் திட்டத்தின் கீழுள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு –

வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கின்ற மாறாந்தை கால்வாய்

2 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

பத்தாவது அறிவிப்பு –

ஆலங்குளத்தில் இருக்கின்ற அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 1 கோடி ரூபாய் செலவில் குடிநீர் மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும்.

இந்த பத்து முத்தான அறிவிப்புகளும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நான் நம்புகிறேன்.

மக்களான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி! மக்களைக் காக்கவே இந்த ஆட்சி! மக்களை வளர்க்கவும், மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இந்த ஆட்சி! இந்த நான்கையும் நான்காண்டு காலமாக நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். எப்போதும் மக்களையே நினைத்துக் கொண்டு நாங்கள் இயங்குகின்ற காரணத்தால் தான் மக்களாகிய நீங்களும் எங்களுடன் இருக்கிறீர்கள்! நமக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கம்தான் சிலரை தூங்கவிடாமல் செய்கிறது. அதனால்தான், நாள்தோறும் ஏதாவது ஒரு அவதூறு செய்தியை அடித்து விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமி அவர்கள், விரக்தியின் உச்சத்துக்கே சென்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இப்போது எப்படி பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீரை பாசனத்துக்காக குறிப்பிட்ட நாளில் இல்லை, அதற்கும் முன்பாகவே திறந்து விடுகிறோம். தொடர்ந்து நல்ல மழை பெய்கிறது, நல்லாட்சிக்கான அடையாளமாக மக்கள் இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கிறார்கள். என்ன அரசியல் - “விளைவித்த நெல்லை வாங்கவில்லை, அது அழுகிவிட்டது” என்று ஏதாவது அவதூறுகளை பழனிசாமி சொல்லிக் கொண்டு வருகிறார்.

விவசாயப் பெருமக்கள் பாடுபட்டு, உற்பத்தி செய்கின்ற நெல்லை ஒரு நெல்மணி கூட வீணாக கூடாது என்று அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அந்த அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில், முந்தைய ஆட்சிக் காலத்தைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1972-ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி, அதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி, கொள்முதல் செய்யப்படும் முறையை தமிழ்நாட்டிற்கு என்று தனியே உருவாக்கினார். நம்முடைய ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. பாசனப் பரப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நெல் கொள்முதலையும் அதிகரித்திருக்கிறோம். நெல் கொள்முதல் கிடங்குகளும் அதிகரித்திருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 70 இலட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன்! இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் - 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன். இது நம்முடைய ஆட்சியின் டேட்டா!

இதுவே முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டும்தான்! இந்த அடிப்படை கூட தெரியாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது! அவருடைய ஹிஸ்டரியே அதுதான்!

நெல் கொள்முதல் குறித்த மேலும் சில புள்ளிவிவரங்களை சொல்ல வேண்டும் என்றால், அதிமுக ஆட்சிக் காலத்தில், அக்டோபர் முதல் தேதிதான் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஒரு மாத காலம் முன்பாகவே, அதாவது செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில், நெல்லை விற்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே, செப்டம்பர் 1-ஆம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அவர்களும் அந்த கோரிக்கையை பார்த்துவிட்டு, வந்து பார்வையிட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது.

இது எதுவும் தெரியாமல், எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். புலம்பிக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரைக்கும், தினந்தோறும் இதைப் பற்றி விசாரித்து நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கின்ற பழனிசாமி ஆட்சியில் தான் மிக மோசமான நிலை – என்னவென்றால், மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக, 2 ஆண்டு காலம் போராடுகின்ற விவசாயிகளைப் பற்றி என்ன சொன்னார் பழனிசாமி, ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தி பேசினார் – அதை நானும் மறக்கமாட்டேன். விவசாயிகளும் மறக்க மாட்டார்கள்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவன் இதோ உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதுவும் நாட்டிற்கு நன்றாக தெரியும்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மழைநீர் தேங்கி பாதிக்கப்படக் கூடாது என்ற, மக்கள் அச்சமில்லாமல், தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவுகின்ற வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து நிலைமையை கண்காணித்து அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து அதை நாங்கள் Follow செய்கிறோம். மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படுகின்ற பகுதிகளில், வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்திருக்கிறோம்.

சென்னையில், நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், விழும் மரங்களை அகற்ற மர அறுவை இயந்திரங்கள் என்று அனைத்துமே தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி போர்க்கால தயாரிப்பு நிலையோடு நாம் இருக்கிறோம். மக்களைக் காக்க எங்களுக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை. நாம் ஆட்சிக்கு வந்து மூன்று முறை இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்திருக்கிறோம். வேண்டிய உதவிகளை செய்து மக்களைக் காப்பாற்றினோம். ஆனால், பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரணப் பணிகளுக்காக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு வழங்கியதா? இல்லை! இதுவரைக்கும் வழங்கவில்லை. ஏன் வழங்கவில்லை? அப்படி வழங்கினால், தமிழ்நாடு சீராகிவிடும், வளர்ந்துவிடும். அது நடைபெறக் கூடாது என்று நினைக்கிறார்கள் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசு.

ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களைக் காப்பது தான் நம்முடைய கடமை என்று செயல்பட்டு வரக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால், என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.

இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கின்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே, பீகாரில், இதனால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். பா.ஜ.க. தோல்வி உறுதியானால், வாக்காளர்களையே நீக்கத் துணிந்தார்கள். அதே Formula-வை தமிழ்நாட்டிலும் இப்போது முயன்று பார்க்கிறார்கள்.

தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து நாம் எல்லோரும், அனைத்து வகையிலும், இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கேரளாவும் நம்முடன் இதில் இணைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக, நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க, வருகின்ற நவம்பர் 2-ஆம் தேதி அன்று நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டயிருக்கிறேன். அழைப்பு விடுத்திருக்கிறேன். அனைவருக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.

இந்த மேடையிலிருந்து மீண்டும் உறுதியாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான்! அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம்! தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்!

மக்களாட்சியைக் காப்பாற்றுவதற்கான இந்த முன்னெடுப்பில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கெடுக்க வேண்டும் என்று நான் இந்த மேடையிலிருந்து அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறேன். இயற்கைப் பேரிடராக இருந்தாலும், செயற்கையான அரசியல் சதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து மக்களைக் காப்பதுதான் என்றைக்குமே நம்முடைய பணி!

நான் முதலில் சொன்னது போல, மகத்தான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி! மக்களைக் காக்கவே இந்த ஆட்சி! மக்களை வளர்க்கவே இந்த ஆட்சி! மக்களுக்கு தேவையானதை கொடுக்கவே இந்த ஆட்சி! இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும்! தொடரும்! தமிழ்நாட்டின் வளம் பெருகும்! பெருகும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News