பழநி காதலனை கரம் பிடிக்க படகில் வந்த இலங்கை காதலி: மண்டபம் முகாமில் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்: பழநி காதலனை கரம் பிடிக்க இலங்கையில் இருந்து படகில் வந்த இளம்பெண் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார். ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, டிராவல் பேக்குடன் ஒரு பெண் தனுஷ்கோடி நோக்கி நடந்து செல்வதாக அப்பகுதி மீனவ மக்கள், போலீசாருக்கு தெரிவித்தனர். மரைன் மற்றும் புலனாய்வு போலீசார் சென்று விசாரணை செய்ததில், இலங்கை திரிகோணமலை மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (24) என்பது தெரிந்தது.
இவர், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில் அரிச்சல்முனை வந்துள்ளார். மரைன் எபோலீசார், அந்த பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் போர் நடந்தபோது, விதுர்ஷியாவின் பெற்றோர் இந்தியாவிற்கு வந்து பழநியில் உள்ள முகாமில் குடும்பமாக வசித்துள்ளனர்.
பின்னர் கடந்த 2016ல் அரசு அனுமதியுடன் குடும்பத்துடன் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர். அங்கு வாழும் சூழல் இல்லாததால் ஒரு மாதத்தில் மீண்டும் பழநிக்கே வந்து வசித்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கவி பிரகாஷ், விதுர்ஷியா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பதிவு திருமணம் செய்வதற்கு சென்றனர். அப்போது காலாவதியான விசாவில் இருப்பதால் பதிவு திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை சரி செய்ய விசா காலம் முடிந்து கூடுதலாக தங்கியதற்கு அபராத தொகையை செலுத்தி இலங்கை சென்றார். அங்கிருந்து முறையாக இந்தியா வருவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்த அவருக்கு, இந்திய தூதரகம் விசா பெறுவதற்கான தகுதி நிலை இல்லை என அனுமதி மறுத்துள்ளது.
இதனால் காதலனை கரம் பிடித்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு முடிவு செய்து, நேற்று அதிகாலை 1 மணிக்கு தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு அரிச்சல்முனை வந்திறங்கினார். படகுக்கு இலங்கை மதிப்பில் ரூ.2 லட்சம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. மரைன் போலீசார் வழக்குப்பதிந்து அவரை மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.