பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களின் கணக்கு தணிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் வருடாந்திர வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 2023ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் ேநற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுபடி, இதுவரை 541 கோயில்களின் கணக்கு தணிக்கை விவரங்களின் சுருக்கம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க, அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், கணக்கு தணிக்கை முழு விவரங்களை பதிவேற்றவில்லை. நிதித்துறை தணிக்கை இயக்குனர் இந்த வழக்கில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், முந்தைய உத்தரவில், பெரிய கோயில்களின் கணக்கு தணிக்கை முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தோம். ஆனால், சட்டப்படி தணிக்கையின் சுருக்கத்தை பதிவேற்றம் செய்து உள்ளோம் என்று இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதிய விளக்கம் தர அறநிலையத்துறை நினைப்பது சரியானதல்ல. எனவே, முந்தைய உத்தரவின்படி, பழனி, திருச்செந்துார் போன்ற பெரிய கோயில்களின் கணக்கு தணிக்கை முழு விவரங்களை, இரண்டு வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.