பழனி முருகன் கோயிலில் நாளை முதல் ரோப் கார் சேவை தொடக்கம்
பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் சென்று வர வசதியாக ரோப்கார், மின் இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதாலும், சுற்றுலா அனுபவமாக இருப்பதாலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலரும் ரோப் காரில் செல்லவே விரும்புகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. ரோப் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தன.
இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு வல்லுனர் குழு ஆய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.