இந்திய தாக்குதலில் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை மீண்டும் கட்டும் பாகிஸ்தான் அரசு: தீவிரவாதி வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவால் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டி வருவதை லஷ்கர் தீவிரவாதி காணொளி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த மே மாதம் 26 அப்பாவி மக்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமையகமான முரிட்கே, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய முகாமான பஹவல்பூர் போன்றவை தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால், அந்த முகாம்கள் செயல்படவில்லை என பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த பொய்யை அவர்களது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே காணொளி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த காசிம் என்ற தீவிரவாதி, இந்தியாவால் தகர்க்கப்பட்ட முரிட்கே முகாமின் இடிபாடுகள் முன்பு நின்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவின் தாக்குதலில் எங்கள் முகாம் அழிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், முன்பைவிட பெரியதாக மசூதியை மீண்டும் கட்டி வருகிறோம். பாகிஸ்தான் இளைஞர்கள் இங்கு தீவிரவாதப் பயிற்சிக்கு சேர வேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு காணொளியில் பேசிய அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, முகாமை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும்தான் நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேபோல, பஹவல்பூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அந்த அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி ஏற்கனவே ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்த கட்டுமானப் பணிகளுக்கு நிதி உதவி அளிப்பதும், வெள்ள நிவாரணம் என்ற பெயரில் தீவிரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதும் இந்திய உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.