வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி
தரூபா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 4 ரன்னில் வெளியேற எவின் லூயிஸ் 60 ரன் (62பந்து) அடித்தார். பின்னர் வந்த கீசி கார்டி 30, கேப்டன் ஷாய் ஹோப் 55 (77 பந்து, 4 பவுண்டரி) ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 10 ரன்னில் அவுட் ஆகினர். ரோஸ்டன் சேஸ் 54 பந்தில் 53, குடகேஷ் மோதி 18 பந்தில்
31 ரன் எடுத்தனர். 49 ஓவரில் 280 ரன்னுக்கு வெஸ்ட்இண்டீஸ் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின்ஷா அப்ரிடி 4, நசீம்ஷா 3 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 281 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான்அணியில் சைம் அயூப் 5, அப்துல்லா ஷபீக் 29 ரன்னில் வெளியேற பாபர் அசாம் 47, கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன் அடித்தனர். சல்மான் ஆகா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹசன் நவாஸ் 54 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 63, ஹுசைன் தலாத் 37 பந்தில் 41 ரன் விளாசினர். இதனால் 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன் எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹசன் நவாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.