பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் ஆபரேஷன் சிந்தூரில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தினோம்: ஏர் மார்ஷல் திவாரி தகவல்
புதுடெல்லி: “பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன” என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய விமானப்படை துணைத்தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி கூறியதாவது: பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள், இந்தியாவின் மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தன. பின்னர் மூன்று படைகளும் தங்களின் செயல்பாட்டு விருப்பங்கள் பற்றிய அறிக்கைகளை ஏப்ரல் 24ம் தேதி ஒரு உயர்மட்ட குழுவிடம் வழங்கின.
மூன்று படைகளின் விருப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அதனடிப்டையில் இலக்குகள் பட்டியலிடப்பட்டு, மூன்று படைகளின் அதிக விருப்பங்களை ஒன்பதாக குறைத்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான பதில் தாக்குதல் வலுவாக, வௌிப்படையாக இருக்க வேண்டும், எதிர்கால தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் இருக்க வேண்டும், முழு அளவிலான மோதலாக விரிவடைவதற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை பெற வேண்டும் என்று அரசின் உயர்மட்ட உத்தரவுகள் 3 தௌிவான நோக்கங்களை கொண்டிருந்தன. அதன்படி 50க்கும் குறைவான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி முழுமையான ஆதிக்கத்தை அடைய முடிந்தது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50க்கும் குறைவான ஆயுதங்களை மட்டுமே ஏவியதால் மே 10ம் தேதி பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வர வழி செய்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.