பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு!
கத்தார்: கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்திருந்த நிலையில் எல்லை வன்முறையை நிறுத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹா பேச்சு நடந்தது.
இதில் ஆப்கன், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதையடுத்து பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் அறிவித்துள்ளது.