'பாகிஸ்தான் - சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம்!' - இந்திய வெளியுறவுத் துறை
டெல்லி : பாகிஸ்தான் - சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது பரிசீலனையில் இருந்தது. இந்த ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்கிறோம். நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதையும், அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.,” எனக் குறிப்பிட்டுள்ளார்.