வெற்றி பெற்றதாக மக்களை நம்பவைக்கும் பாகிஸ்தான்; ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒருவித சதுரங்க ஆட்டம்: இந்திய ராணுவத் தளபதி விளக்கம்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அந்நாட்டு மக்களிடம் தாங்கள் வெற்றிப் பெற்றதாக பிரசாரம் செய்து வருவதையும், இந்திய ராணுவ நடவடிக்கை குறித்த முக்கிய தகவல்களையும் ராணுவ தளபதி கூறினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப். 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்த நிலையில், இந்திய ராணுவப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி அதிகாலையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 26 சுற்றுலா பயணிகளை கொன்ற மூன்று தீவிரவாதிகளும் கடந்த மாதம் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் ராணுவத்தால் வேட்டையாடப்பட்டனர். இந்நிலையில் சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி உரையாற்றினார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள்தான் வென்றதாக பாகிஸ்தான் அந்நாட்டு மக்களை எப்படி நம்ப வைத்து வருவதாக கூறினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், ‘வெற்றி என்பது நமது மனதில் தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். பாகிஸ்தானியரிடம் நீங்கள் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா? என்று கேட்டால், அப்போது அந்த நபர் ‘எங்கள் நாட்டு தளபதி ஃபீல்டு மார்ஷலாகிவிட்டார்; நாங்கள் நிச்சயம் வென்றிருப்போம்; அதனால்தான் அவர் உயர் பதவிக்கு உயர்ந்திருக்கிறார்’ என்று சொல்வார். இப்படித்தான் அவர்கள் நாட்டு மக்கள், எதிரி நாட்டு மக்கள் மற்றும் நடுநிலை மக்களைக் கவர்கிறார்கள்’ என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேசன் சிந்தூர் மூலம், இந்தியப் படைகள் தங்களது பாணியில் நீதியை நிலைநாட்டின. இந்திய ராணுவத்தின் இந்த செய்தி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆபரேசன் சிந்தூர் சின்னத்தை ஒரு லெப்டினன்ட் கர்னலும், ஒரு வீரரும் உருவாக்கினர். பதிலடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகும் போதே, இந்த செய்திப் பரிமாற்ற உத்திகளுக்கும் நாங்கள் தயாரானோம்.
இதற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த அரசியல் உறுதியே முக்கிய காரணம். தாக்குதல் நடந்த மறுநாளே முப்படைத் தளபதிகளையும் அழைத்து, ‘நடந்தது போதும்’ என்று கூறி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் முழு சுதந்திரத்தையும் படைகளுக்கு வழங்கினார். ‘ஆபரேஷன் சிந்துார்’ ஒருவித சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியாத சூழலில் நாங்கள் சதுரங்க ஆட்டத்தை ஆடினோம். இதனை ‘சாம்பல் நிற மண்டலம்’ என்று அழைக்கப்படும். மேலும் இந்த நடவடிக்கை வழக்கமான போர் நடவடிக்கை அல்ல; ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாதது. நாங்கள் காய்களை நகர்த்தினோம், எதிரியும் நகர்த்தினார். சில இடங்களில் நாங்கள் ‘செக்மேட்’ வைத்தோம்; சில இடங்களில் எங்களது வீரர்களை இழக்கும் அபாயத்தையும் மீறி வெற்றியை நோக்கிச் சென்றோம்’ என்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விளக்கினார்.