பாகிஸ்தானில் ஒரு மாதமாக வெளுத்து வாங்கும் கனமழை: மேகவெடிப்பு, திடீர் வெள்ளத்தால் சுமார் 200 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் புரட்டி போட்ட கனமழை பெரு வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்டவை பெருத்தம் சேதமடைந்து இருக்கின்றன. பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு மாதமாகவே மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை திடீர் வெள்ளத்தால் மலை பாங்கான வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் பெரும் பாதிப்புள்ளாகி இருக்கிறது. குறிப்பாக குனர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் இருந்து 300 பள்ளி மாணவர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. சுவாட் மாவட்டத்தில் 7 வீடுகள், 3 பள்ளி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பல்வேறு வீடுகள் சேதத்திற்குள்ளாகின. வெளுத்து வாங்கும் கனமழையால், சிந்து, சைரன், குன்ஹர் நதிகளும், அதன் கிளை ஆறுகளில் அபாயகர அளவில் வெள்ளம் கரைபுரள்கிறது. சைரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நவசாபாத் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மரங்கள் வேரோடு பெயர்ந்தன. சிந்து நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரள்வதால், கைபர் பக்துன்க்வா - பால்டிஸ்தான் இடையே செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மின் பகிர்மான நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மின் கம்பங்கள் மின்மாற்றி சேதமடைந்தன. இதனால் மாகாணத்தில் மின்சாரம் சீரடைய பணியாளர்கள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சீக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் பஜௌர்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரு விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மீட்பு குழுவினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாகாணத்தில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 21ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.