பாகிஸ்தானுடன் நெருங்கும் அமெரிக்கா.. சர்வதேச அளவில் கவனம் பெறும் ட்ரம்ப்பின் காய் நகர்த்தல்!!
வாஷிங்டன்: பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருவது உலக அரசியலில் கவன ஈர்பதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிபரான பின்பு பாகிஸ்தானுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்புகளின் நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பது பாகிஸ்தானின் எண்ணெய் வளத்தை வெளிக்கொண்டு வர உதவுவோம் என கூறியதை உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. இதற்கெல்லாம் சிகரமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை, வெள்ளை மாளிகைக்கே அழைத்து விருந்து கொடுத்தது உலகின் கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிலையில் ட்ரம்ப்பின் நகர்வு கவனம் பெற்றது.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையில் அமெரிக்கா - பாகிஸ்தான் நெருக்கம் குறித்து விரிவான கட்டுரை வெளியாகி இருந்தது. இந்த நெருக்கம் இந்தியாவை மட்டும் இல்லாமல் சீனாவையும் மத்திய கிழக்கு அரசியலையும் பாதிக்கும் என அதில் கூறப்பட்டு இருந்தது. சர்வதேச உறவுகள் குறித்த மையம் என்ற சீனா அமைப்பின் நிபுணர் கூறுகையில், அமெரிக்காவின் நட்புக்காக சீனாவின் நெருங்கிய உறவை பாகிஸ்தான் ஒருபோதும் விட்டுவிடாது என தெரிவித்தார். அமெரிக்கா, பாகிஸ்தான் நட்பு குறித்த அதிர்வுகள் தற்காலிகமானதே என்றும், இது சீனா - பாகிஸ்தான் இடையிலான வலுவான அடித்தளம் கொண்ட உறவை அசைத்துவிடாது என்றும் தெற்காசிய பொருளாதார விவரங்களுக்கான மையத்தில் ஆராய்ச்சி நிபுணர் கூறியுள்ளார்.