பாக்.கிற்கு மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல்: சீனா தாராளம்
பீஜிங்: பாகிஸ்தானுக்கு 3வது நீர்மூழ்கி கப்பலை சீனா ராணுவம் வழங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை உணர்த்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா 8 ஹேங்கர்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கான 3வது ஹேங்கர் வகுப்பு நீர் மூழ்கி கப்பலை சீனா வழங்கியுள்ளது. மூன்றாவது ஹேங்கர்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலினை ஒப்படைக்கும் விழா மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் வியாழக்கிழமை நடைபெற்றதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா தயாரித்து வரும் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டாவது போர் கப்பல் கடந்த மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது. பாகி்ஸ்தானின் க்வாடார் துறைமுகத்தை சீன கடற்படை கட்டி வருகிறது.பாகிஸ்தானின் கடற்படையை வலுப்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் 4 அதி நவீன போர் கப்பலை சீனா வழங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரிஸ்வான் என்ற உளவு கப்பலை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியது. அதே போல் ராணுவ டாங்கிகள், ஜேஎப் 17 போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தானுக்கு அந்த நாடு வழங்கியுள்ளது.