பாக். சிறையில் சந்திக்க அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் இம்ரானின் சகோதரி மனு தாக்கல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் சிறையில் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில் இம்ரானின் சகோதரி அலீமா கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதில், வாரத்திற்கு இரண்டு முறை இம்ரானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இம்ரான் கானை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இம்ரானை சந்திப்பதற்கு அனுமதிக்கும் உத்தரவுகள் இருந்தபோதிலும் சிறை நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* 16 மணி நேர போராட்டம்
அடியாலா சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் சந்திப்பதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இம்ரானின் சகோதரி, கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹைல் அப்ரிடி உ்ள்ளிட்டோர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இம்ரானை சந்திக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 16 மணி நேரம் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. அதன் பின்னரும் இம்ரானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.