தொடரை இழந்த பாக். 3வது ஒரு நாள் போட்டி: ஹோப் தந்த ஹோப் வெ.இ. அபார வெற்றி
டரோபா: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்றுள்ளன. இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நேற்று நடந்தது. இப்போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங், கேசி கார்டி, ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்டு, குடகேஷ் மோதி ஆகியோர் ஏமாற்றினர்.
இருப்பினும், 7 வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரெவ்ஸ் இணை 49 பந்துகளில் 110 ரன் வெளுத்தனர். அதனால் வெ.இ 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. அந்த அணியின் ஹோப் 120 (94 பந்து), ஜஸ்டின் 43 (24 பந்து) ரன் விளாசி கடைசி வரை களத்தில் நின்றனர்.
அதனையடுத்து 295 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சைம் அயூப், அப்துல்லா ஷஃபீக் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொதப்பியதால், அந்த அணி 29.2 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் 202 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வெ.இ 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.