பாக். எல்லை பகுதி பாதுகாப்புக்கு ஏகே-630 துப்பாக்கிகள்: இந்திய ராணுவம் டெண்டர் வெளியீடு
புதுடெல்லி: சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் வான் பாதுகாப்புக்காக வரும் 2035க்குள் சுதர்சன் சக்ரா திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.இந்தத் திட்டமானது சுயசார்பு இந்தியா” என்ற கொள்கையின் கீழ், இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க உதவும். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இஸ்ரேலில் உள்ள அயர்ன்டோமை போன்ற பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவது சுதர்சன் சக்ரா திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்த நிலையில்,பிரதமர் மோடி அறிவித்த சுதர்சன் சக்ரா திட்டத்தின் கீழ் ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை வாங்குவதற்கான டெண்டரை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசுக்கு சொந்தமான ஏடபிள்யூஈஐஎல் நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வான் பாதுகாப்புக்கான இந்த நவீன துப்பாக்கிகள் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் முக்கிய நகரங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும்’’ என்றனர்.