பஹல்காம் தாக்குதல்: கைதான 2 பேரின் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு: என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு: பஹல்காம் தாக்குதலில் கைதான 2 பேரின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு உதவி அளித்ததாக பஹல்காம் அருகே உள்ள பைசரணை சேர்ந்த பஷீர் அகமது ஜோதாட், பட்கோட்டேவை சேர்ந்த பர்வைஸ் அகமதுவை கடந்த ஜூன் 22ல் என்ஐஏ கைது செய்தது.
இவர்கள் இருவரும் ஜம்முவில் உள்ள அம்பல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் 90 நாள் காவலில் எடுத்து என்ஐஏ விசாரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி காணொலி மூலம் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகளிடம் இன்னும் பல முக்கிய விசாரணைகள் நடத்த வேண்டி உள்ளதால் காலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கும்படி என்ஐஏ வழக்கறிஞர் சந்தன் குமார் சிங் கோரிகை விடுத்தார். இதை விசாரித்த நீதிபதி சந்தீப் கண்டோத்ரா, இருவரின் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.