நெல் கொள்முதல் விலை உயர்வு திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்: முதல்வரை சந்தித்து அமைச்சர்கள் நன்றி
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு 2025-26ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 எனவும், பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 எனவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதன்மூலம், இந்த ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில், சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.