நெல் கொள்முதலுக்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
சென்னை: நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் வேளாண்மை உழவர் நலத்துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டில் 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் 47.99 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-26 கொள்முதல் பருவத்தில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இதுவரை 14.18 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையினரால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2025-26 ஆண்டில் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட கணிசமான உயர்வைப் பெற்றுள்ளதாலும், நெல் விளைச்சலும் அதிகமாக உள்ளதாலும் இந்தாண்டு நெல் மகசூல் வரலாற்றுச் சாதனையை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தடையின்றி நெல் கொள்முதல் செயல்பாடுகளுக்கு தேவையான சாக்கு. சணல் . தார்ப்பாலின் பாய்கள், ஈரப்பதமானி. மின்னணு தராசு, தரச் சோதனைக் கருவிகள், நெல் தூற்றும் இயந்திரங்கள், சவுக்கு கட்டைகள், வெட்டுக்கற்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்கவும் மாவட்ட அலுவலர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டு அதிகமான அளவில் நெல்கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால், 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையிட்ட நவீன நெல் சேமிப்புத் தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், மாவட்ட வாரியாக கிடங்கு வசதிகளை மதிப்பாய்வு செய்து, புதிய தற்காலிகக் திறந்தவெளி கிடங்குகளை அமைக்கும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசின் பயன்பாட்டிலில்லாத கட்டிடங்கள் மற்றும் பிற துறைகளின் கிடங்குகளையும் தற்காலிகச் சேமிப்பிற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து நெல்லினை எவ்வித காலதாமதம் இன்றி கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்திட கூடுதல் திட்டம் வகுத்திடவும், நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக விவசாயிகள் கூட்டம் நடத்திடவும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், எதிர்வரும் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை ஆலைகளுக்கும். சேமிப்பு கிடங்குகளுக்கும் தாமதமின்றி நகர்வு செய்திடவும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள நெல்லினை மிகவும் பாதுகாப்பாக வைத்திடவும். இவற்றை கண்காணித்திட மண்டல அளவில் மேற்பார்வை அலுவலர்கள் நியமித்திடவும். மாவட்ட அளவில் கொள்முதல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்து செயல்படவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு வேளாண் விளைப்பொருள் விற்பனை வாரிய ஆணையர் த.ஆபிரகாம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் முனைவர் ஆ. அண்ணாதுரை, வேளாண்மை இயக்குநர் பா. முருகேஷ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் சு. சிவராசு, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன இயக்குநர் முனைவர். ஜெ. விஜயாராணி, கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மருத்துவர். மு. வீரப்பன், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா. மற்றும் வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.