நெல்லை, தூத்துக்குடியில் சம்பவம் வியாபாரி தவறவிட்ட ரூ.2.5 லட்சத்தை ஒப்படைத்த டீக்கடைக்காரர்: சாலையில் கிடந்த ரூ.2 லட்சம்; போலீசாரிடம் தந்த தொழிலாளி
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஜே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (30). அரிசி வியாபாரியான இவர் நேற்று முன்தினம் மதியம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் உள்புறமுள்ள டீ கடையில் டீ குடித்துள்ளார். அங்கு தனது கைப்பையை வெளியே வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் ரூ.2.5 லட்சம் இருந்தது. சிறிதுநேரம் கழித்து பையை கண்டெடுத்த கடை உரிமையாளர் கிருஷ்ணன் (52), உடனடியாக சேரன்மகாதேவி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரனை மேற்கொண்டதில் பணத்தை தவறவிட்டது மாரியப்பன் என தெரிந்து அவரை வரவழைத்து ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் தர்மராஜ், நேர்மையுடன் செயல்பட்ட டீ கடைக்காரர் கிருஷ்ணணுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). தொழிலதிபரான இவர், கோவில்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து, தொழில் சம்பந்தமாக ரூ.2 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டார். வழியில் பணப்பை சாலையில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அவ்வழியாக பைக்கில் வந்த சாத்தூரைச் சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளி குமார் (33) என்பவர், பணப்பையை கண்டெடுத்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பணப்பையை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஜெய்சங்கரை வரவழைத்து ஒப்படைத்தார். பணத்தை ஒப்படைத்த குமாரை, இன்ஸ்பெக்டர் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.